
உத்தரப்பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் கடைசி கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம், இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில், சமாஜ்வாதி, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், கடந்த மாதம் 11-ம் தேதி முதல், வரும் 8-ம் தேதி வரை, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
ஏற்கெனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், Ghazipur, Varanasi, Chandauli, Mirzapur உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு உட்பட்ட 40 தொகுதிகளில் 7-வது கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில், மொத்தம் 535 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தொகுதிகளில் கடந்த சில வாரங்களாக அனல் பறக்க நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம், இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
இதனையொட்டி, ஆளும் சமாஜ்வாதி மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 22 தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில், இரோம் ஷர்மிளாவின் மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டணி களத்தில் உள்ள போதிலும், பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுமாலையுடன் நிறைவடைவதால், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.