Bengaluru : கர்நாடக அரசில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த அந்த இறந்த பெண்மணி, பெங்களூருவில் சுப்ரமணியபோராவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
45 வயதான பிரதிமாவின் கார் ஓட்டுநர், வேலை முடிந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டுள்ளார், சுமார் எட்டு வருடங்களுக்கும் மேலாக பிரதிமா அந்த வீட்டில் தான் வசித்து வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை நடந்த அன்று, பிரதிமாவின் கணவரும், மகனும் வீட்டில் இல்லாதபோது இரவு சுமார் 8:30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை இரவு முழுவதும் வீட்டில் பிரதிமாவின் உடல் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரத்திமாவின் சகோதரர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது தான், அவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. முந்தைய நாள் இரவு அவருக்கு போன் செய்தேன், ஆனால் சகோதரி பதிலளிக்கவில்லை, அதனையடுத்து உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபரின் சாத்தியக்கூறு உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக அரசில் பணிபுரியும் ஒரு உயர் பதவியில் இருக்கும் அதிகாரி கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.