
பயிர்க்கடன், வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் 33வது நாளாக தமிழக விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அய்யாகண்ணு தலைமையில் நடக்கும் இந்த போராட்டம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதிய யுக்தியை கையாண்டு வித்தியாசமாக நடத்தி வருகின்றனர்.
மீசை, தலைமுடியை பாதியாக மழித்தும், குட்டி கர்ணம் அடித்தும், அரை நிர்வாம், பிரதமர் அலுவலகம் அருகே நிர்வாண ஓட்டம், எலிக்கறி, பாம்பு கறி சாப்பிடுவது என நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நேற்று சேலை கட்டி போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எம்பி கனிமொழி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, தமிழக அமைச்சர்கள், தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் இன்று, தாலி அறுக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பெண்களை போல் சேலையை அணிந்து கொண்டு, கழுத்தில் தாலியை கட்டி கொண்டு இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வங்கியில் நாங்கள் வாங்கிய கடனுக்கு, அதிகாரிகளின் வார்த்தைகள் தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது.
“வாங்கிய கடனை கொடுக்கு வாக்கில்லை. உனக்கு எதுக்கு மீசை” என கேட்கிறார்கள். அதற்காகவே மீசையை பாதியாக மழித்தோம். “நீ எதுக்கு ஆம்பளையா இருக்கே. பொண்டாட்டி புடவையை கட்டிக்கோ” என்றனர். இதனால், நேற்று புடவையை கட்டி போராடினோம்.
“உன் பொண்டாட்டி தாலியை விற்று பணத்தை கட்ட வேண்டியதுதானே” என கேட்டனர். அதற்காக நாங்கள், இன்று தாலி அறுக்கும் போராட்டத்தை நடத்துகிறோம் என்றனர்.
கடன் தொல்லையால் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மாரடைப்பால் பலர் இறந்துள்ளனர். விவசாயிகளின் மனைவிகள் விதவையாக வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.
இவ்வளவு போராட்டம் நடத்தியும், பிரதமர் நரேந்திர மோடி எங்களை பார்க்க வரவில்லை. விவசாயிகளின் வாழ்வுக்கு நல்ல பதிலை கூற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.