
மகாராஷ்டிராவில் அரசுக்கு பெரும் தலைவலையைத் தந்திருப்பது இப்போதைக்கு விவசாயிகள் பிரச்னைதான். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகள் போராடியவுடன், அதற்காக அரசு ஒரு குழு அமைத்து கடன் தள்ளுபடியில் இறங்கியது. பின்னர், ஆன்லைன் மூலம், தங்கள் ஆதார் எண்களுடன், கடன் தள்ளுபடி கோரும் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று கூறியதும் விவசாயிகள் பெருமளவில் பதிவு செய்துவந்தனர். ஆனால், ஆதாருடன் பதிவு செய்யச் சொன்னபோதுதான், சிக்கல் எழுந்தது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்த மஹாராஷ்டிரா அரசு, அதற்கான பணியை மேற்கொள்ள ஒரு கண்காணிப்புக் குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவினர் விவசாயிகளின் வங்கிக் கணக்கு மற்றும் அவர்களின் ஆதார் எண்களை சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் முதற்கட்டமாக சுமார் 30லட்சம் விவசாயிகளின் விவரங்களை வங்கிகள் அக்குழுவினருக்கு அளித்தனர். இந்தத் தகவல்களை மாநில அரசு சரிபார்த்தது. அப்போது, வங்கிகள் அளித்த விவசாயிகளின் விவரங்களில் 80 சதவீத தகவல்கள் போலியானவை எனக் கண்டறிந்துள்ளது மாநில அரசு.
இவ்வாறு, வங்கிகள் மூலம் மஹாராஷ்டிரா மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட விவசாயிகளின் ஆதார் அட்டை எண்களில், ஒரு எண்ணே சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்கப் பட்டிருப்பதால் அந்தத் தகவல்கள் போலியானதாகவும், தவறானதாகவும் உள்ளது என்கிறது மாநில அரசு. எனவே, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதில் மேலும் கால தாமதம் ஆகும் என மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.