
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களை நிறுத்தி, மறக்காமல் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொது மக்களை ஆச்சரியப்டுத்தினார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 4–வது தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
பின்னர் தெண்டுல்கர் விமான நிலையத்துக்கு காரில் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதை கண்டார்.
உடனே அவர் தனது காரை நிறுத்தி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். தெண்டுல்கரை கண்டதும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஹெல்மெட் அணியாமல் வந்தார். இதனை கவனித்த தெண்டுல்கர், அந்த பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்து தான் மோட்டார் சைக்கிள் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனால் திகைத்துப்போன அந்த பெண் , வருத்தம் தெரிவித்ததுடன், இனிமேல் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வேன் என்று தெண்டுல்கரிடம் உறுதி அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெண்டுல்கர் மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு பிரசார காட்சிகள் வீடியோ பதிவாக முகநூலில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.