பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்ததற்கு அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா, கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களை கவுரவுக்கும் விதமாக வழங்கப்படுகிறது.
அந்தவகையில், பீகார் மாநில உரிமைகளுக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தனது அரசியல் வாழ்க்கை முழுவதிலும் குரல் கொடுத்த உயர் சமூகத்தினரின் எதிரியாக கருதப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்ததற்கு அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதையடுத்து, பிரதமரை சந்தித்த அனுபவங்களை கர்பூரி தாக்கூரின் குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர்.
பாரத ரத்னா விருது பெற்ற ஸ்ரீ கர்பூரி தாகூர் குடும்பத்தினர், இன்று பிரதமரை சந்தித்து பாரத ரத்னா விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர். pic.twitter.com/fPCvejcrE5
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
கர்பூரி தாக்கூரின் மகன் ராம்நாத் தாக்கூர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி மக்களின் நாயகர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளார். எனது சார்பாக, எனது குடும்பத்தினர் சார்பாக, பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். எங்கள் குடும்பங்கள் மகிழ்ச்சியாக உள்ளன. பீகார் மக்கள் சார்பாக பிரதமரை வாழ்த்த வந்தேன்.” என்றார்.
கர்பூரி தாக்கூரின் பேரன் ரஞ்சித் குமார் கூறுகையில், “பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது இரவில்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. அறிவிப்பு வெளியானதும் கிராமம் முழுவதும் மகிழ்ச்சி. பட்டாசுகள் வெடித்தன. கிராமம் முழுவதும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தீபாவளி போல் இருந்தது மறுநாள், எனது தந்தையை அழைத்து பிரதமர் பேசினார். குழந்தைகளையும் அழைத்து வரச் சொன்னார். பிரதமர் எங்கள் வீட்டில் இருந்து வந்ததாக உணர்கிறேன்.” என்றார்.
டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் இருந்த புழு!
கர்பூரி தாக்கூரின் குடும்பத்தை சேர்ந்த நமிதா குமாரி கூறுகையில், “எனது தாத்தாவுக்கு பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது. இதுவே மிகப்பெரிய மகிழ்ச்சி, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பிரதமர் எங்களை அழைத்து, இவ்வளவு மரியாதை கொடுத்துள்ளார். எங்களிடம் நேரம் செலவழித்து அருமையாக பேசினார்.” என்றார்.
“நரேந்திர மோடி ஜி என் தாத்தாவுக்கு பாரத ரத்னா வழங்கத் தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என டாக்டர் ஜாக்ரிதி தெரிவித்துள்ளார். அதேபோல், “மோடிஜி இல்லாவிட்டால் அவருக்கு இந்த கவுரவம் கிடைத்திருக்காது. மோடிஜி ஒவ்வொரு நபரையும் பற்றி சிந்திக்கிறார்.” என மிருத்யுஞ்சய் கூறியுள்ளார். “நான் நரேந்திர மோடி ஜிக்கு மிகவும் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது தாத்தாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்துள்ளார். இதுவரை யாரும் இதைச் செய்யவில்லை.” என குமாரி மது தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு 1.5 மடங்கு அதிகமாக வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!
கர்பூரி தாக்கூரின் அரசியல் வரலாறு பீகார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவரது அரசியல் பாரம்பரியத்தை உரிமை கோருவதில் மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகளிடையே பரஸ்பர போட்டி நிலவி வருகிறது. கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்த இரண்டு நாட்கள் கழித்து இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.