
கணவர் இறந்ததாக கூறி இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் போலி ஆவணங்களைக் காட்டி ரூ.16 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் ஜிதேந்திர சிங். இவருக்கு சில நாட்களாக தீவிர காய்ச்சல் இருந்து வந்தது. இதை அடுத்து, மருத்துவமனையில் தங்கி ஜிதேந்திர சிங் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜிதேந்திர சிங், தனது பெயரில் ஆறு நிறுவனங்களில் இன்சூரன்ஸ் செய்துள்ளார். இதனைப் பயன்படுத்த நினைத்த ஜிதேந்திராவின் மனைவி, திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
கணவர் இறந்ததாக கூறி இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற அவர் முயற்சி செய்துள்ளார். இதற்காக, கணவர் ஜிதேந்திர சிங் இறந்ததாக சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை சட்டவிரோதமாக பெற்றுள்ளார். இதற்கு மருத்துவர்கள் உள்ளிட்ட சிலர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த போலி ஆவணங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் சமர்ப்பித்து இதுவரை 16 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலும் பணம் பெறுவதற்காக, ஜிதேந்திராவின் மனைவி, பஜாஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். ஆவணங்களைப் பார்த்த அந்த நிறுவன அதிகாரி, சந்தேகம்டைந்து, போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த ஆவணங்களை போலீசார் விசாரித்தபோது, அவை அனைத்தும் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மோசடிக்கு உதவியாக இருந்த மருத்துவர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.