
இந்திய பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன் தொகையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் போலி நிறுவனங்களின் பெயரில் விஜய் மல்லையா மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனம் தொடங்குவதாகக் கூறி தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றார். ஆனால் பெற்ற கடனை மல்லையா திருப்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கிலிருந்து தப்பிக்கும் விதமாக கடந்த ஆண்டு மல்லையா லண்டனுக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற 9000 கோடி ரூபாய் தொகையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அவர் தொடங்கிய போலி நிறுவனங்களின் பெயரில் மாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், புதிய குற்றப்பத்திரிகை லண்டன் நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும். இதனால், மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும் என சிபிஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.