
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான அரசியல் கட்சிகள், மாநில கட்சிகள், தொலைத் தொடர்பு, மின்சாரம், தண்ணீர் வரி உள்ளிட்ட அரசுக்கு எந்த கட்டண பாக்கியும் வைக்கவில்லை என்ற சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2015ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் “ தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில், தங்கள் கட்சி அரசுக்கு எந்தவிதமான மின், தொலைபேசி கட்டணம், இட வாடகை பாக்கி வைக்கவில்ைல என்ற சான்றிதழையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.
இதன் அடிப்படையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் நிலுவை கட்டணம் பாக்கியில்லை என்ற சான்றிதழை வேட்புமனுத் தாக்கலின் போது தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
ஆணையம் கடிதம்
இந்நிலையில், கடந்த 11-ந்ேததி அனைத்து தேசிய, மாநில அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-
அனைத்து தேசிய அரசியல் கட்சிகளும், மாநில அரசியல் கட்சிகளும் அரசு வழங்கிய இடங்களில் கட்சி அலுவலகத்தை செயல்படுத்தி வந்தால், அல்லது வேறு எந்த பயன்பாட்டுக்காக அரசு இடத்தை பயன்படுத்தி வந்தால், அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
அரசு இடத்தில் கட்சி அலுவலகத்தை நடத்தி வந்தால் அதற்குரிய வாடகையை முழுமையாக செலுத்திவிட்டதற்கான ரசீது, தொலைபேசிக் கட்டணம், குடிநீர் கட்டணம், உள்ளாட்சி கட்டணம் உள்ளிட்ட எதையும் ஜூன் 30-ந்தேதி வரை நிலுவை வைக்காமல் செலுத்திவிட்டதற்கான ரசீதுகளை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை என்ன?
அவ்வாறு தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
நாட்டில் 7 தேசிய கட்சிகளும், 48 மாநில அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் டெல்லியில் செயல்பட்டு வரும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் அரசு இடத்தில் இல்லாமல், வாடகை கட்டிடத்தில் வாடகை செலுத்தி நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.