கர்நாடகாவில் ஹனி டிராப் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் உட்பட 48 பேர் ஹனி டிராப் வலையில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜண்ணா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் புதன்கிழமை ஹனி டிராப் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாநிலக் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா, சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, எம்எல்ஏக்களை ஹனி டிராப் செய்ய முயற்சி நடப்பதாகப் பேசினார்.
பாஜக முன்னாள் அமைச்சர் வி. சுனில் குமார் காங்கிரஸ் அரசாங்கம் "ஹனி டிராப் ஃபாக்ட்ரி" போல செயல்படுவதாகக் குற்றம்சாட்டியதை அடுத்து, ராஜண்ணா இவ்வாறு பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விஷயத்தில் ஒரு மூத்த காங்கிரஸ் அரசியல்வாதி ஈடுபட்டுள்ளார் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் கூறினார்.
ராஜண்ணா, தான் குறிவைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மற்ற அரசியல்வாதிகளும் இதற்கு இலக்காகியுள்ளனர் என்று கூறினார், இதன் மூலம் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 48 அரசியல்வாதிகளை ஹனி டிராப் செய்ய முயற்சி நடக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
"நான் மட்டும் இல்லை; சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் உட்பட 48 பேர் ஹனி டிராப் வலையில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வைத்து ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்று ராஜண்ணா கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரினார். கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று சட்டமன்றத்தில் உறுதியளித்தார்.
அமைச்சர் ராஜண்ணாவின் பேச்சு கர்நாடக சட்டமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. விவாதத்தின்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி சபாநாயகர் இருக்கை முன்பு கூடி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபாநாயகர் உத்தரவின் பேரில், பாஜகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆக்ஸ்போர்டு அகராதியின்படி, 'ஹனி டிராப்' என்பது "ஒரு கவர்ச்சிகரமான நபர், பெரும்பாலும் ஒரு பெண், ஏதாவது ஒரு பெரிய ஆதாயத்திற்காக பாலியல் உறவுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் மோசடிச் செயல் ஆகும்.
டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி, மூத்த மாநில அமைச்சர் ஒருவரை ஹனி டிராப்யில் சிக்க வைக்க இரண்டு முறை முயற்சி நடந்ததாக கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி தெரிவித்திருக்கிறார். ஹனி டிராப் முயற்சிகளுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க போலீஸ் விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஹனி டிராப் சதி அரசியல் பிரமுகர்களால் ரகசியமாக திட்டமிடப்படுவதாகவும் ராஜண்ணா கூறியுள்ளார். ஹனி டிராப்களின் நோக்கம் தனிநபர்களை இழிவுபடுத்துவது மட்டுமல்ல, அரசியல் போட்டியை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
ராஜண்ணாவின் கருத்துகளுக்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உட்பட பல அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தபோது, இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.
இந்த விவகாரத்தில் பதிலளித்துப் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஹனி டிராப் புகாருக்காக எவருக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறினார். அதே நேரத்தில், நியாயமான விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
இருப்பினும், சித்தராமையாவின் கருத்துக்கள், எதிர்க்கட்சிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர்கள் இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனர். இந்த மோசடியைக் கண்டித்த பாஜக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக அவதூறு பரப்புவதற்கும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாட்டைத் தடுப்பதற்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதற்கிடையில், ராஜண்ணா முறையான புகார் அளித்தவுடன் விசாரணை தொடங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவுர் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் உறுதி அளித்தனர். உயர்மட்ட விசாரணைக்கு உறுதியளித்த பின்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடனடி நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தினர். ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் பாரபட்சமற்ற முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.