
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இறுதியான முடிவல்ல என்று உத்தரகாண்ட முதல் அமைச்சர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று ஆங்கில ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்தது..
இக்கருத்துக் கணிப்பு முடிவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார். இதே போலவே உத்தரகாண்டிலும் நடக்கும்... தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு பேசுகிறோம்... இவ்வாறு ராகுல் குறிப்பிட்டிருந்தார்...
ராகுல்காந்தியின் இதே வார்த்தைகளை முன்மொழிந்திருக்கிறார் முதல் அமைச்சர் ஹரீஷ் ராவத், " தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு அல்ல. அது ஒரு அனுமானம் மட்டுமே. இதற்கு முன்பு நடைபெற்ற பல தேர்தல்களில் இது போன்ற கருத்துக் கணிப்புகள் பொய்யாகி உள்ளன. பெருவாரியான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று ராவத் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவின் படி உத்தரகாண்டை பா.ஜ.க. கைப்பற்றுமா?அல்லது ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இம்மாநிலத்தை மீண்டும் தக்கவைக்குமா என்பதற்கான விடை நாளை தெரிந்துவிடும்