
இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளரின் ஓட்டு பதிவானதை உறுதி செய்யும் வாக்கு தணிக்கை சீட்டு (விவிபிஏடி) எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி கூறி உள்ளது.
தேர்தல்களில் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது பெருத்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, தில்லுமுல்லு செய்ய ஏற்றவை, தேர்தல் முடிவுகளையே மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளவை என்று பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மின்னணு ஓட்டு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று கூறப்படுவதை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இது பற்றியும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்தது. பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 தேசிய கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 48 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நேற்றறு நடைபெற்றது. இதில் 7 தேசிய கட்சிகளும் 35 மாநிலக் கட்சிகளும் கலந்து கொண்டன.
கூட்டத்தை அடுத்து தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி பேசுகையில், இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளரின் ஓட்டு பதிவானதை உறுதி செய்யும், வாக்கு தணிக்கை சீட்டு (விவிபிஏடி) எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என கூறி உள்ளார்.
ஹேக்கிங்கை நிரூபிக்க அழைப்பு
இதற்கிடையே மின்னணு ஓட்டு எந்திரங்களை ஹேக்கிங் செய்ய முடியும் என குற்றம் சாட்டும் அரசியல் கட்சிகள் அதனை செய்து காட்டவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் விவிபிஏடி எந்திரங்களைவாங்க முடிவுசெய்து, மத்திய அரசிடம் நிதியும் பெற்று உள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள தேர்தல்களில் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுடன், வாக்காளரின் ஓட்டு பதிவானதை உறுதி செய்யும் விவிபிஏடி எந்திரங்களும் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி செய்து உள்ளது.