மின்னணு வாக்குப்பதிவு எந்திர சவாலில் பங்கேற்றும் பரிசோதிக்காத இரு மிகப்பெரிய கட்சிகள்

First Published Jun 3, 2017, 11:09 PM IST
Highlights
EVM checking by the Aam admi and cpm

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிப்பது தொடர்பான சவாலில் பங்கேற்ற இரண்டு கட்சிகளும் எந்திரத்தில் எந்த பரிசோதனையும் செய்யவில்லை.

சவால்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும், ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மாற்றம் செய்யமுடியும் என்று ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன.

இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது. அதன்படி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று கூறும் கட்சிகள் அதனை நிரூபிக்கலாம் என்று சவால் விட்டது.

4 மணி நேரம்

‘ஜூன் 3 ஆம் தேதி, அதாவது நேற்று தேசிய மற்றும் மாநில கட்சிகள் வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கலாம். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சியும் தலா 3 பேரை நியமித்துக்கொள்ளலாம்.

முறைகேடு செய்ய முடியும் என்பதை காட்ட ஒவ்வொரு கட்சியும், தேர்தல் நடந்த ஏதாவது நான்கு பூத்களில் பயன்படுத்திய நான்கு எந்திரங்களை தேர்வு செய்துகொள்ளலாம். ஒவ்வொரு கட்சிக்கும் நான்கு மணி நேரம் ஒதுக்கப்படும்’ என தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியிருந்தார்.

இரு கட்சிகள்

தேர்தல் ஆணையத்தின் இந்த சவாலை ஏற்று தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே வாக்குப்பதிவு எந்திரத்தை பரிசோதிக்க பதிவு செய்திருந்தன.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பரிசோதிக்கும் நிகழ்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் பங்கேற்ற இரண்டு கட்சிகளுக்கும் தலா 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்கப்பட்டன.

பரிசோதிக்கவில்லை

ஆனால், இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் சவாலை ஏற்று, எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய எந்தவித முயற்சிகளையும், பரிசோதனைகளையும் மேற்கொள்ளவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற குழு, வாக்குப்பதிவு எந்திரத்தின் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்த செயல்விளக்கத்தை பார்த்தது.

தோல்வி

தேசியவாத கட்சி குழுவினர், தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம், வாக்குப்பதிவு எந்திர செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடியது.

எனவே, தேர்தல் ஆணையத்தின் இந்த சவாலில் இரு கட்சிகளுமே தோல்வி அடைந்ததாகத்தான் கருதப்படும்.

click me!