
சட்டத்தை கையில் எடுத்து செயல்படும் பசு குண்டர்கள் எல்லாம், நர மாமிசம்உண்பவர்கள் என்று அழைக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் மாட்டிறைச்சி உண்ண உரிமை உண்டு என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ்அதவாலே கடுமையாக தாக்கியுள்ளார்.
கடந்த புதன்கிழமை 31-வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் மாட்டிறைச்சி வைத்து இருந்ததாகக் கூறி பா.ஜனதாவினர் பொது இடத்தில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். அதன்பின் பொதுமக்கள் தலையிட்டு, அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, மும்பையில்நிருபர்களிடம் கூறியதாவது-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் மாட்டிறைச்சி சாப்பிட உரிமை உண்டு. ஆட்டுக்கறி விலை அதிகமாக இ ருக்கும் நிலையில் மக்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள்.
நாக்பூரில் முஸ்லிம் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். பசுக் குண்டர்கள், பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நர மாமிசம் சாப்பிடுபவர்களாக மாறுவதற்கு உரிமை இல்லை. பசுக் குண்டர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவதற்கு அனுமதியில்லை. இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எங்கும் நடைபெற அனுமதிக்க கூடாது.
பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். பசுக்களை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் நான் கண்டிக்கிறேன்.
பசுக் குண்டர்கள் உண்மையில் நர மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று அழைக்கப்பட வேண்டும். அவர்கள் மோடி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துபவர்கள். பசுக்குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மோடி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.