
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து, புதுவையைச் சேர்ந்த மாணவ அமைப்பினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முகமூடி அணிந்து கொண்ட இருவரை அடித்தும் உதைத்தும் நூதன முறையில் போராட்டம் நடத்துகின்றனர்.
தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
நடத்தி வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, புதுச்சேரியில் எதிர்கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் என எந்தவொரு போக்குவரத்தும் இயக்கப்படவில்லை. மேலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புதுவை நெல்லித்தோப்பு பகுதியில் மாணவ அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இ.பி.எஸ்-ம், ஓ.பி.எஸ்.-ம் இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்திக்காததைக் கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மூகமூடியை அணிந்து கொண்ட இருவரை சாலை வழியாக இழுத்து வந்தனர்.
அப்போது அவர்கள் இருவரையும் அடித்தும், உதைத்தும், செருப்பால் அடித்தும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.