காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் நடைபெற்ற சோதனையில் துப்பாக்கிகள், மதுபாட்டில்கள், ரூ.5 கோடி ஆகியவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
ஹரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 100 மது பாட்டில்கள், ரூ.5 கோடி ரொக்கம், சட்டவிரோத வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் சுமார் 300 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார் மற்றும் இந்திய தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி) முன்னாள் எம்எல்ஏ தில்பாக் சிங் மற்றும் அவர்களது கூட்டாளிகள் தொடர்பான இடங்களில் சட்டவிரோத சுரங்கம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனையானது சோனிபட் காங்கிரஸ் எம்எல்ஏவும், சுரங்க தொழிலதிபருமான சுரேந்திர பன்வார் மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் நேற்று தொடங்கியது. ஆறு வாகனங்களில் எம்.எல்.ஏ.வின் வீடு, அலுவலகம் மற்றும் பிற இடங்களுக்குச் சென்ற சுமார் 15 முதல் 20 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல், யமுனாநகர் தொகுதியின் இந்திய தேசிய லோக்தளம் முன்னாள் எம்.எல்.ஏ.வும், சுரங்க தொழிலதிபருமான தில்பாக் சிங்கிற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. யமுனாநகர், சோனிபட், மொஹாலி, ஃபரிதாபாத், சண்டிகர், கர்னால் உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, மதுபானம் மற்றும் ரொக்கம் தவிர, 4 முதல் 5 கிலோ எடையுள்ள மூன்று தங்க பிஸ்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சுரங்கத்திற்கு தடை விதித்த பிறகு, யமுனாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சட்டவிரோதமாக கற்பாறைகள், ஜல்லிகள் மற்றும் மணல் அள்ளியதாகக் கூறப்படும் பல வழக்குகளை விசாரிக்க ஹரியானா மாநில காவல்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. பின்னர், 2013ஆம் ஆண்டில் இதுதொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
ராயல்டி வசூலை எளிதாக்குவதற்கும் வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் 2020ஆம் ஆண்டில் ஹரியானா அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சுரங்கத்திற்கான பில்கள் மற்றும் சீட்டுகளை உருவாக்குவதற்கான ஆன்லைன் போர்ட்டலான 'இ-ராவணா' என்ற திட்டத்தை போலியாக இயக்கி வருவதாக சோதனைக்குள்ளாகியிருக்கும் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.