டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் ஒரு கோடி ரூபாய் வரை பரிசு….மத்திய அரசு அதிரடி….

First Published Dec 16, 2016, 6:50 AM IST
Highlights


டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் ஒரு கோடி ரூபாய் வரை பரிசு….மத்திய அரசு அதிரடி….

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்ததை அடுத்து பொது மக்களிடையே பணப் புழக்கம் குறைந்துள்ளதோடு மட்டுமல்லாமல்,பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது .அதாவது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், மொபைல் செயலி மற்றும் பேடிஎம் போன்ற மின்னணு பண பரிமாற்ற வழிமுறைகளை பயன்படுத்துமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதை பொது மக்களிடையே பிரபலப்படுத்தும் வகையில் புதிய பரிசுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை  திட்ட கமிஷனுக்கு மாற்றாக தொடங்கப்பட்டுள்ள  ‘நிதி ஆயோக்’ அமைப்பு செயல்படுத்த உள்ளது.
அதன்படி மின்னணு முறையில் பண பரிமாற்றம் செய்யும் பொது மக்களுக்கு ‘லக்கி கிரஹாக் யோஜனா’ திட்டப்படி, வருகிற 25-ந் தேதியில் இருந்து அடுத்த 100 நாட்களுக்கு நாள்தோறும் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000 வீதம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும், 7 ஆயிரம் பொதுமக்களுக்கும், 7 ஆயிரம் வியாபாரிகளுக்கும் வாராந்திர பரிசு வழங்கப்படும்.

பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என்ற வகையிலும், வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2,500 என்ற வகையிலும் வாராந்திர பரிசுத்தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதிவரை இந்த வாராந்திர பரிசு வழங்கப்படும்.

இதுதவிர, அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, ஏப்ரல் 14-ந் தேதி அதற்கான குலுக்கல் நடைபெறும். கடந்த நவம்பர் 8-ந் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதிவரை மின்னணு முறையில் பண பரிமாற்றம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பொதுமக்களுக்கு ரூ.1 கோடி, ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் என்ற வகையிலும், வியாபாரிகளுக்கு ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.12 லட்சம் என்ற வகையிலும் மெகா பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

click me!