மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 2.89 உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

By Manikanda PrabuFirst Published Jun 6, 2023, 12:35 PM IST
Highlights

கர்நாடகாவில் மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.89 உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது. தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றுள்ளனர்.

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு, இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கர்நாடகாவில் மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.89 உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

க்ருஹ ஜோதி திட்டம் எனப்படும் முதல் 200 யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மாநில அரசு அறிவிப்பின் பின்னணியில், பெங்களூரு மின்சாரம் வாரியமான பெஸ்காம் (Bangalore Electricity Supply Company - Bescom) நிறுவனத்தின் நுகர்வோர் ஜூன் மாதத்தில் மட்டும் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதல் செலவு சரிசெய்தல் (FPPCA) மற்றும் ஏப்ரல் நிலுவைத்தொகை ஆகியவற்றை சேர்த்து ஜூன் மாதத்தில் நுகர்வோர் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதாவது, ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதல் செலவு சரிசெய்தலானது மார்ச் மாதத்தில் பிரதிபலிக்க வேண்டும். ஆனால், பில்லிங் சிக்கல்கள் மற்றும் நேரமின்மை காரணமாக அதனை செயல்படுத்த முடியவில்லை. ஜூன் மாதத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.49 எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதல் செலவு சரிசெய்தல் தொகை விதிக்கப்படும். கடந்த மே மாதம் பாஜக ஆட்சியின்போது, யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தி உத்தரவிடப்பட்டது. ஆனால், தேர்தல் நேரம் என்பதால், அந்த கட்டண உயர்வு நிறுத்து வைக்கப்பட்டு, ஜூன் மாதம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனுடன் ஏப்ரல் மாத நிலுவைத் தொகையான 70 பைசாவும் ஜூன் மாத கட்டணத்துடன் சேர்க்கப்படும். இவை அனைத்தையும் சேர்த்து ஜூன் மாதம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 கட்டணம் செலுத்த வேண்டும் வரும்.

 இதுகுறித்து கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (KERC) தலைவர் ரவிக்குமார் கூறுகையில், “தொழில்நுட்ப காரணங்களால், மார்ச் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதல் செலவை (FPPCA) சரி செய்ய முடியவில்லை. அதனை மீட்டெடுக்க முடியாமல் போய்விட்டது. அதனை வசூலிப்பதற்கான அதிகாரத்தை விதிகள் வழங்கியுள்ளன. அந்த செலவை சரி செய்யாமல் விட விதிகள் அனுமதிக்காது. எனவே, அந்த தொகை வசூலிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

தயக்கம் காட்டும் சசிகலா: திருமண விழாவில் திருப்பம் ஏற்படுவதில் சிக்கல்!

அதேபோல், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு மாறாக, 2022-23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதல் செலவை ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் திரும்பபெறுமாறு மின்சார விநியோக நிறுவனங்களுக்கு (Escoms) கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பெங்களூரு மின்சாரம் வாரியமான பெஸ்காம், ஜூலை முதல் செப்டம்பர் வரை ஒரு யூனிட்டுக்கு 51 பைசாவும், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் யூனிட்டுக்கு 50 பைசாவும் வசூலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அவர்களது கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதல் செலவானது எப்படி சரி செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ரவிக்குமார் கூறுகையில், “அவர்களின் பில்களை ஈடுசெய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும், வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் வரை எங்களால் உறுதியாக எதுவும் கூற முடியாது.” என தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஒரு பக்கம் இலவச மின்சாரம் என அறிவித்துவிட்டு, மறுபக்கம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.89 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அம்மாநில பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

click me!