மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

By Manikanda PrabuFirst Published May 10, 2024, 5:01 PM IST
Highlights

வாக்குப்பதிவு தரவுகள் தாமதம் தொடர்பான மல்லிகார்ஜுன் கார்கேவின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த மாதம் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், 94 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 7ஆம் தேதியும் நடைபெற்று முடிந்த நிலையில், வருகிற 13ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அடுத்தடுத்தக்கட்ட தேர்தல்கள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளன.

இதனிடையே, தேர்தல் ஆணையம் அளித்த வாக்குப்பதிவு புள்ளி விவரங்களில் முரண்கள் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியிருந்தார். 

முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அவற்றுக்கான இறுதி வாக்குபதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது பேசு பொருளாக மாறியது. குறிப்பாக முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை 4 நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், தேர்தல் நடந்து முடிந்த அன்று வெளியான சதவீதத்துக்கும், நீண்ட தாமதத்துக்கு பிறகு வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் சில முரண்பாடுகள் இருந்தன.

இதுகுறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், “2024 மக்களவை தேர்தல் ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்” என குறிப்பிட்டு வாக்குப்பதிவு விவரங்களில் இருக்கும் முரண்கள் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கார்கே கடிதமும் எழுதியிருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

அக்கடிதத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையில் முரண்பாடுகள் இருப்பதாகவும், வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான நம்பகத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தனது 52 ஆண்டுகால தேர்தல் வாழ்வில், இறுதி நேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததை தான் பார்த்ததில்லை என தெரிவித்திருந்த கார்கே, இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வோம் என தெரிவித்து பல்வேறு கேள்விகளையும் தனது கடிதத்தில் எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல்களை சுமூகமாகவும் நியாயமான முறையிலும் நடந்து வருவதில் குழப்பத்தையும் தவறான கருத்தை பரப்பி இடையூறுகளை உருவாக்கும் நோக்கில் மல்லிகார்ஜுன் கார்கேவின் கடிதம் இருப்பதாகக் கூறி தேர்தல் ஆணையம் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக பாதிக்கும் எந்தவொரு செயலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

click me!