
வரும் 17-ந்தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் வரும் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாநிலத்தின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கின் மதிப்பு என்பது மாநிலத்தின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப மாறுபடும். ஆனால், எம்.பி.களின் வாக்கு மதிப்பு 708 என்பதில் மாற்றமில்லை.
ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 மதிப்புள்ள வாக்குகள் பதிவாகும். அதில் வேட்பாளர் வெற்றி பெற 50 சதவீதத்தை கடந்திருக்க வேண்டும். அதாவது 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 மதிப்புடை வாக்குகள் பெற வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ராம் நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியின் வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறும் என்பதால், வாக்களிக்கும் தகுதி உடையவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் தங்களது வாக்கை அளிக்கலாம். இதில் கட்சி கட்டளையிட முடியாது.
இது குறித்து தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை நேற்று வௌியிட்டுள்ளது. அதில், “ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்கு கேட்க தகுதியுடைய வாக்காளர்களிடம் பிரசாரத்தில் ஈடுபடலாம். வாக்கு கேட்கலாம். தங்களுக்கே ஓட்டளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கலாம்.
அதே சமயம், ஒவ்வொரு அரசியல் கட்சியின் கொறடாவும், இந்த குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று தங்களது கட்சியின் எம்.எல்.ஏ., எம்.பி.களுக்கு உத்தரவிடக் கூடாது. வாக்களிப்பவர்கள் தாங்கள் யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதை சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு அரசியல் கட்சியின் கொறடா உத்தரவோ அல்லது கட்டளையோ பிறப்பித்தால், இந்திய தண்டனைப் பிரிவு 171சி பிரிவின்படி, “ வாக்காளர் ஒருவரின் ஓட்டளிக்கும் உரிமையில் தாமாக முன்வந்து தலையிட்டு இடையூறு செய்து தாக்கத்தை ஏற்படுத்துவதாக கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.