
1-ம் வகுப்பு முதல் 8-ம் வரை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை தோல்வி(ஃபெயில்) அடைய வைக்க கூடாது என்ற விதிமுறை அடுத்த கல்வி ஆண்டு முதல் நீக்கப்பட உள்ளது.
2018ம் ஆண்டு முதல், இனிமேல், கட்டாய தேர்ச்சி செய்யப்பட மாட்டார்கள், மாறாக படிக்கும் திறன் அடிப்படையிலேயே அவர்களின் தேர்ச்சி இருக்கும். நாட்டில் கல்வித்தரம் குறைந்து கொண்டே வருவதையொட்டி, இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது
திரிபுரா மாநிலம், அகர்தலாவில் உள்ள சமஸ்கிருத கல்வி நிலையத்துக்கு மத்திய மனித வள இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே வந்திருந்தார். அங்கு நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது கூறுகையில், “ 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாண, மாணவிகளை கட்டாய தேர்ச்சி பெறவைக்க வேண்டும் என்ற விதிமுறையை நினைத்து பல்வேறு மாநிலங்கள் கவலை தெரிவிக்கின்றன. இந்த விதிமுறையை நீக்க பல மாநிலங்கள் ஆதரவுதெரிவிக்கின்றன.
இதையடுத்து, அடுத்த கல்வி ஆண்டுமுதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்காமல் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்படும். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின், கட்டாய தேர்ச்சி முறை அடுத்த ஆண்டில் இருந்து நீக்கப்படும்.
அதேசமயம், இந்த முறையை தொடர்ந்து கடைபிடிப்பதா? அல்லது நீக்குவதா? என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம்.
மேலும், பிரதமர் மோடி, நாட்டில் உள்ள 20 பல்கலைக்கழங்களை உலகத் தரத்துக்கு இணையாக மாற்ற திட்டமிட்டு, அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.