
ஜி.எஸ்.டி. சட்டம் நடைமுறைக்கு வந்தபின், பொருட்களின் மீது புதிய எம்.ஆர்.பி.(அதிகபட்ச சில்லரைவிலை) விலையை ஒட்டாவிட்டால் தயாரிப்பாளர்கள், வர்த்தகர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வரை அபராதம், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று மத்திய அரசுஎச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
ஜி.எஸ்.டி. வரிச் சட்டம் தொடர்பாக நுகர்வோர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குறைகள் ஆகியவற்றை தீர்த்து வைக்க நுகர்வோர் அமைச்சகம் சார்பில் ஏற்கனவே ஒரு கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜி.எஸ்.டி. தொடர்பாக மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க உதவி எண்களும் 14 என்ற எண்ணிக்கையில் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரை 700-க்கும் மேற்பட்ட கேள்விகள் மக்களிடம் இருந்து கேட்கப்பட்டு, அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி. வரியை முதன்முதலாக நடைமுறைப்படுத்தும் போது சில சிக்கல்கள், இடையூறுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அனைத்தும் விரைவில் சீர் செய்யப்படும்.
நுகர்வோர்கள், வர்த்தகர்கள் தெரிவிக்கும் கவலைகள், குறைகளை தீர்க்க நிதி அமைச்சகம், நுகர்வோர் விவகாரத்துறை ஆகியவை தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் விற்காமல் தேங்கிக் கிடக்கும் பொருட்களின் மீது ஜி.எஸ்.டிக்கு பிந்தைய விலையை ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.
அதாவது பொருட்களின் மீது பழைய எம்.ஆர்.பி. விலையையும், ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தபின், புதிய எம்.ஆர்.பி. விலையையும் ஒட்ட வேண்டும். அப்போதுதான் நுகர்வோர்களுக்கு விலை மாற்றத்தை தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளோம்.
இந்த புதிய விதிமுறையை கடைபிடிக்காத தயாரிப்பாளர்கள், வர்த்தகர்கள், கடைக்காரர்கள் முதல்முறையாக தவறு செய்யும் போது ரூ. 25 ஆயிரம் அபராதமும், 2-வது முறையாக செய்தால், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மூன்றாவது முறையாகவும் தொடர்ந்து தவறு செய்தால், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.