தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட எந்த வடிவத்திலும் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் அரசியல் கட்சிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் தேர்தல் செயல்பாட்டின் போது குழந்தைகளை எந்த விதத்திலும் ஈடுபடுத்தப்படுவதை சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் ஏந்துவது, வாகனத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்வது, பேரணிகள் போன்ற எந்த வகையிலும் குழந்தைகளை பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி!
அதேசமயம், எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒரு அரசியல் தலைவரின் அருகாமையில் ஒரு குழந்தை அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இருப்பது விதிகளை மீறுவதாக கருதப்படாது எனவும் இதுதொடர்பான வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்கை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜனநாயகத்தின் அம்சங்களை நிலைநிறுத்துவதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.