நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி!

By Manikanda Prabu  |  First Published Feb 5, 2024, 2:44 PM IST

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது


ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அம்மாநில முதல்வராக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரனை கடந்த மாதம் 31ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

இதையடுத்து, ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவராக அறியப்படும் மூத்த தலைவர் சம்பய் சோரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட இழுபறிக்கு பின்னர், கடந்த 3ஆம் தேதியன்று அம்மாநில ஆளுநர் மாளிகையில் சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

Tap to resize

Latest Videos

அதன் தொடர்ச்சியாக, சம்பய் சோரன் தலைமையிலான புதிய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இந்த நிலையில், ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது. சம்பய் சோரனுக்கு ஆதரவாக 47 எம்.எல்.ஏ.க்களும், எதிராக 29 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்ததால், சம்பய் சோரன் அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்த இந்திய நகரம்: என்ன காரணம்?

முன்னதாக, ஆபரேஷன் தாமரை திட்டத்தின்கீழ், ஆளும் கூட்டணி கட்சிகளின் சில எம்எல்ஏக்களை பாஜக அணுகியதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றம் சாட்டியது. இதனால், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இன்று மீண்டும் ராஞ்சி அழைத்து வரப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், நீதிமன்ற அனுமதியுடன் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் கலந்து கொண்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று காலியாக உள்ளது. எஞ்சியுள்ள 80 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் 46 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதேசமயம், பாஜக கூட்டணிக்கு 29 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்த நிலையில், 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது.

click me!