
சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கக் கூடாது, சாதனைகள் குறித்தும் விளக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு கடிதம் எழுதியுள்ளது.
தேர்தலை காரணம் காட்டி, பட்ஜெட்டை தள்ளிவைக்கத் தேவையில்லை. பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பு செய்துள்ளது.
5 மாநிலத் தேர்தல்
உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கும் பிப்ரவரி 4-ந்தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை பல கட்டங்களாக நடக்கிறது. பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பட்ஜெட்டால், இந்த 5 மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள் ஈர்க்கப்படலாம், ஆதலால் பட்ஜெட்டை தேர்தல் முடிந்தபின் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்து இருந்தார். எதிர்க்கட்சிகளும் இதையே வலியுறுத்தின.
தடையில்லை
இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகர், நீதிபதி என்.வி. ரமணா, டி.ஓய்.சந்திரசூத் ஆகியோய்ரஅடங்கி அமர்வு, “ தேர்தல் நடப்பதற்கும், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கும் தொடர்பில்லை. ஆதலால், பட்ஜெட்டை தள்ளிவைக்க தேவையில்லை'' என்று நேற்று முன்தினம் அறிவித்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.
கடிதம்
இந்நிலையில், தேர்தல் ஆணையம், மத்திய அமைச்சரவை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், “ சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் எந்த விதமான சலுகைகள், திட்டங்கள் எதையும் மத்தியஅரசு அறிவிக்கக் கூடாது.
உறுதி செய்யுங்கள்
அதேபோல, இந்த 5 மாநிலங்களில் இதுவரை மத்தியஅரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், சாதனைகள் குறித்தும் பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெறக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம், அந்த 5 மாநிலங்களில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த வழி செய்ய முடியும். வாக்களர்கள் மத்தியில் எந்தவிதமான தாககத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை பட்ஜெட் உரையில் உறுதி செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்து இருந்தது.
ஆதலால், அடுத்த 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 5 மாநிலங்களுக்கு தனிப்பட்ட திட்டங்கள், சலுகைகள் இடம் பெறாது எனத் தெரிகிறது.
மாயாவதி வரவேற்பு...
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கும் திட்டங்கள் ஏதும் அறிவிக்கக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “ தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மத்தியஅரசுநேர்மையான முறையில் அனுக வேண்டும். உத்தரவுகளை மதித்து அதற்கு பணிந்து நரேந்திர மோடி அரசு நடக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.