
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அவசரச்சட்டம் கொண்டு வந்து அனுமதி கிடைத்துள்ளநிலையில், கர்நாடக மாநிலத்தில் பாரம்பரியமாக நடக்கும் கம்பளா எனப்படும் எருமை மாட்டு பந்தயத்துக்கும் தடை நீக்ககோரி அங்குள்ள ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கு முதல்வர் சித்தராமையாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடலோரப் பகுதிகளான தட்சின கன்னட மாவட்டங்களில் சேற்றில் எருமை மாடுகளை ஓடவிடும் ‘கம்பளா’ பந்தயம் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவை மேற்கோள்காட்டி, கம்பளா போட்டியை நடத்தக்கூடாது என்று பீட்டா அமைப்பு மாநில உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு மனு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜி அந்தபோட்டிக்கு தடை விதித்து கடந்த நவம்பரில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தடையை நீக்கக் கோரி கம்பளா விளையாட்டுக் குழு அமைப்பினர் செய்த மனு மீதான விசாரணை வரும் 30-ந்தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால், தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி போட்டியை நடத்தியுள்ளது.
ஆதலால், தமிழகத்தைப் போன்று தாங்களும் போராட்டத்தில் இறங்கப்போவதாக கம்பளா போட்டி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மங்களூருவில் கம்பளா போட்டி அமைப்பினர் கூடி ஆலோசித்து, வரும் 28-ந்தேதி தட்சின கன்னடா மாவட்டங்களில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து மாநில முதல்வர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டபோது, “ நாங்கள் கம்பளா போட்டிக்கு ஆதரவாகவே இருப்போம். கம்பளா போட்டியை நடத்த மத்திய அரசு சாதகமான சூழலை உண்டாக்க வேண்டும் என வலியுறுத்துவோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உதவியதுபோல் எங்களுக்கும் உதவ வேண்டும் என அழுத்தம் கொடுப்போம். போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளவர்கள், கம்பளா போட்டிக்காகவே நடத்துகிறார்கள். நாங்களும் ஆதரவாக இருப்போம்'' என்றார்.
பாரதிய ஜனதா மாநிலத்தலைவர் பி.எஸ். எடியூரப்பா கூறுகையில், “ கம்பளா போட்டி என்பது மக்களின் உணர்வுகளோடு தொடர்புடையதாகும். தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது போல், கம்பளா போட்டிக்கும் தடை நீக்க வேண்டும். நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்''