இந்தியாவிற்கே நம்பிக்கை தரும் செய்தி..! கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட 90 வயது கேரள தம்பதி..!

By Manikandan S R SFirst Published Mar 31, 2020, 8:19 AM IST
Highlights

7 மருத்துவர்கள், 25 செவிலியர்கள் உள்பட 40 மருத்துவ பணியாளர்கள் வயதான தம்பதியினரை தீவிரமாக கவனித்து வந்தனர். அதன் பலனாக தற்போது அவர்களது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து அவர்கள் மெல்ல மெல்ல மீண்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் இதுவரை 202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். அங்கு ஒருவர் கொரோனாவிற்கு பலியாகி இருக்கிறார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தற்போது பூரண குணமடைந்த 90 வயது தம்பதியரின் நிலை ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே இருக்கும் ராணி பகுதியை சேர்ந்தவர் தாமஸ்(93). இவரது மனைவி மரியம்மா(88). இந்த தம்பதியினருக்கு ஆபிரகாம் என்கிற மகன் இருக்கிறார். இவர் வேலை காரணமாக இத்தாலியில் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஆபிரகாம் தனது குடும்பத்தினருடன் கேரளாவிற்கு வந்தார். இந்தநிலையில் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கேரள மருத்துவமனையில் இம்மாத தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடந்தது. அதில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆபிரகாமின் தாய் மற்றும் தந்தைக்கும் கொரோனா ஏற்பட்டிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயது முதிர்ந்த தம்பதியினர் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே வயது மூப்பு காரணமாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அவர்களின் உடல்நிலை கொரோனாவால் மேலும் மோசமடைந்தது. எனினும் தொடர்ந்து 7 மருத்துவர்கள், 25 செவிலியர்கள் உள்பட 40 மருத்துவ பணியாளர்கள் வயதான தம்பதியினரை தீவிரமாக கவனித்து வந்தனர். 

அதன் பலனாக தற்போது அவர்களது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து அவர்கள் மெல்ல மெல்ல மீண்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது. விரைவில் வயதான் தம்பதியினர் இருவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தொடர்ந்து கவனிக்க படுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி,மகன் ஆகியோர் கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்டு வீட்டில் தனிமை சிகிச்சையில் தற்போது உள்ளனர்.

click me!