
ஓடிசா மாநிலம், புவனேஷ்வரில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன்சிங் வாகனம் மீது நேற்று இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் முட்டை வீ்சி தாக்குதல் நடத்தினர். இதில் அமைச்சர் மீது முட்டை படவில்லை, அவரின் வாகனத்தில் மட்டும் விழுந்தது.
ஓடிசா மாநிலம், புவனேஷ்வரில் நடந்த வேளாண்துறை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய வேளாண்துறை ராதாமோகன் சிங் வந்திருந்தார். அவர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் ஜாத்னி இடத்துக்கு காரில் சென்றார்.
மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விருந்தினர் மாளிகைக்கு வெளியே திரண்டிருந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், அமைச்சர் ராதா மோகன்சிங்குக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென, அமைச்சரின் காரை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் முட்டைகளை வீசினர். இதில் அமைச்சர் மீது முட்டைகள் படவில்லை, அவரின் காரின் மீதுபட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் லோகநாத் மகாரதி உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.
இதற்கு பாரதியஜனதா கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிசா பா.ஜனதா மாநில தலைவர் அருண்சிங்கூறுகையில், “ நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி அதன் நம்பகத்தன்மையை இழந்துவருகிறது. ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் மீது வீசுவதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சி எங்கள் மீது வீசுகிறது. ஓடிசாவில் ஆளும் கட்சி, மத்திய அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது கடமையாகும். ” எனத்தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் மஜ்ஹி கூறுகையில், “ இந்த போராட்டத்தில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது மத்திய அரசுக்கு அவசியமான ஒன்று என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.