
ஆதார் தொடர்பான விதிமுறை மீறல்களை வெளியிட்ட தி டிரிபியூன் நாளேட்டின் நிருபருக்கு விருது வழங்க வேண்டுமே தவிர, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யக்கூடாது என்று அமெரிக்கா குறித்த ரகசிய தகவல்களை வௌியிட்ட எட்வர்ட் ஸ்னோடன் தெரிவித்தார்.
ரூ.500க்கு ஆதார் விவரம்
தி டிரிபியூன் ஆங்கில நாளேடு சமீபத்தில் ஆய்வு நடத்தி வெளியிட்ட செய்தியில், “ 500 ரூபாய் கொடுத்தால் 10 நிமிடங்களில் 100 கோடி நபர்களின் ஆதார் விவரங்களைப் பெற முடியும்’’ என்று வெளியிட்டு இருந்தது. கோடிக்கணக்கான மக்கள் தங்களின் வங்கிக்கணக்கு, உடல் அடையாளங்கள் உள்ளிட்டபல விவரங்களை ஆதார் அட்டையில் பதிவுசெய்துள்ள நிலையில், அது குறித்து பெரிய அச்சம் ஏற்பட்டு, பரபரப்பை உண்டாக்கியது.
வழக்குபதிவு
இந்த செய்தியை முதலில் மறுத்த ஆதார் அட்டை வழங்கும் உதய் அமைப்பு, பின்னர், அது போன்று தவறாக பயன்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட தி டிரிபியூன் நாளேடு, அந்த செய்தியை வெளியிட்ட பெண் நிருபர் ரச்சனா கைரா அவர்களின் நிருபர் குழு மீது உதய் அமைப்பின் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
எட்வர்ட் ஸ்னோடன்
இந்நிலையில், நிருபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, அமெரிக்க ரகசிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது-
விருது கொடுங்கள்
இந்தியாவில் ஆதார் தகவல் தொடர்பான விதிமுறை மீறல்கள், தகவல் திருட்டு நடப்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நிருபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக, அவருக்கு விருது கொடுக்க வேண்டும்.
பொறுப்பு யார்?
கோடிக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அழிக்கும் இதுபோன்ற விஷயத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என அரசு நினைத்தால், கொள்கையில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும். அப்படி ஒருவேளை இதற்கு பொறுப்பானவர்களை கைது செய்ய வேண்டுமென்றால்?, அதற்கு பொறுப்பான ‘உதய்’ அமைப்பை கைது செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆதார் விதிமுறை மீறல்கள் நடந்த செய்தி வெளியானவுடன் எட்வர்ட் ஸ்னோடன் டுவிட்டரில்கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது, அவர் கூறுகையில், “ வரலாற்றைப் பார்க்கும்போது, அரசு என்பது, மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று அதை ஆய்வு செய்து, தவறாகப் பயன்படுத்துவது என்பது இயல்பான ஒன்று ’’ என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.