
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணி 198 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வெறும் 39 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பீகார் மாநில தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “பீகார் சட்டமன்றத் தேர்தலில் பீகார் மக்கள் காங்கிரசுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பொய்களையும், ஜனநாயக நிறுவனங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பீகார் மக்கள் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுத்துள்ளனர்.
கூட்டணியின் கூட்டு தலைமையின் மீதான மக்களின் நம்பிக்கையையும், ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டையும் இந்த தேர்தல் முடிவு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த வெற்றியைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோருக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலுவான தீர்ப்பு பீகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும் என்று நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.