
ஓட்டல்கள், ரெஸ்டாரன்டுகள், ஏ.சி.ஓட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை அதிரடியாக குறைத்து ஜி.எஸ்.டி.கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.
மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) கடந்த ஜூலை 1-ந்தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த ஜி.எஸ்.டி. வரியில் 5 வகையான வரி நிலைகள் இருக்கின்றன. வரி இல்லாத பொருட்கள், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய படிநிலைகளில் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு வரி விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-ஆவது கூட்டத்தில் ஏராளமான பொருட்களின் வரிகள் மாற்றி அமைக்கப்பட்டன.
இதில் ஏசி அல்லாத ஓட்டல்களுக்கும், ரெஸ்டாரன்ட்களுக்கும் 12 சதவீதம் வரியும், ஏசி ஓட்டல்களுக்கு 18சதவீதம் ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஓட்டல்களில் மக்களின் வருகை குறைந்து இருந்தது, வியாபாரமும் படுமந்தமாக இருந்தது. இதனால், ஒட்டல் முதலாளிகள் மத்திய அ ரசிடம் புகார் தெரிவித்து, வரியைக் குறைக்க கோரினர்.
இதையடுத்து, ஏசி. ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், ஏ.சி. அல்லாத ஓட்டல்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரியாக 5 சதவீதம் வரியாக குறைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் நேற்று முடிவு எடுத்தது. இதில் வரம்புக்குள் 5 நட்சத்திர ஓட்டல்கள் மட்டும் கொண்டு வரப்படவில்லை.
நாள்ஒன்றுக்கு ரூ.7,500க்கு அதிகமாக அறை வாடகை விதிக்கப்படும் ஒட்டல்களுக்கு வரி 5 சதவீதம் இல்லாமல் 18 சதவீதம் விதிக்கப்பட உள்ளது.
ஏ.சி. அல்லாத ஓட்டல்கள், ஏ.சி. ஓட்டல்கள் அனைத்தும் வரி குறைக்கப்பட்டு ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருப்பதன் மூலம் இனி ஓட்டல் வியாபாரம் சூடுபிடிக்கும் என நம்பலாம்.