178 பொருட்களுக்கு வரி குறைப்பு புகையிலை, ஆடம்பர சாதனங்களுக்கு மாற்றமில்லை ; ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அதிரடி முடிவு

First Published Nov 10, 2017, 9:02 PM IST
Highlights
177 items to become cheaper as GST Council decides to trim 28 per slab


மக்களின் கண்டனம், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு ஆகியவற்றையடுத்து, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 178 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைத்து ஜி.எஸ்.டி.கவுன்சில் நேற்று அறிவித்தது. 

இதனால், சாக்லேட், சூயிங்கம், ஷாம்பு, சலவை பவுடர், சோப்பு உள்ளிட்ட பல பொருட்கள் விலை குறையும். ஏ.சி. ஓட்டல், ஏ.சி. அல்லாத ஓட்டல்களுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளதால், இனி ஓட்டல்களில் சாப்பிடுவது எளிதாகும்.

ஜி.எஸ்.டி. வரி

மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) கடந்த ஜூலை 1-ந்தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

இந்த ஜி.எஸ்.டி. வரியில் 5 வகையான வரி நிலைகள் இருக்கின்றன. வரி இல்லாத பொருட்கள், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய படிநிலைகளில் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு வரி விதிக்கப்படுகின்றன.

ஜி.எஸ்.டி. கவுன்சில்

ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்குப்பின் மாதம்தோறும் ஜிஎஸ்டிகவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டிதொடர்பாகக் கூறப்படும் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.

கடும் விமர்சனம்

இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரியில் சமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் உயர்ந்த வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது குறித்து மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்து கடுமையான விமர்சித்து வந்தன.

குறைப்பு

இதனால், கடந்த இரு முறை கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில்கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பொருட்கள் வரிகள் குறைக்கப்பட்டன. இதில் குறிப்பாக குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டு ஜவுளி, கண்ணாடிப் பொருட்கள், ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட சேலைகள், செயற்கை பட்டு உள்ளிட்டவற்றுக்கு கடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி குறைக்கப்பட்டது.

23-வது கூட்டம்

இருந்தபோதிலும், அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி தொடர்ந்து உயர்வாக இருந்து வந்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்புக்கிடையேஅசாம் மாநிலம், கவுகாத்தியில்நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-ஆவது கூட்டத்தில் ஏராளமான பொருட்களின் வரிகள் மாற்றி அமைக்கப்பட்டன. 

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில், மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின், நிதி அமைச்சர் அருண் ஜெட்லிநிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

178 பொருட்கள்

ஜி.எஸ்.டி. வரியில் 28 சதவீதத்தில் மொத்தம் 227 பொருட்கள் இருந்தன. அதில் 62 பொருட்களைத் தவிர்த்து, மீதமுள்ள 177 பொருட்களின் வரியை மாற்றி அமைக்க மாநில நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்தது. இதில் 62 பொருட்களை ஜி.எஸ்.டி.கவுன்சில் 50 பொருட்களாகக் குறைத்துள்ளோம், 178 பொருட்களின் வரியை மாற்றி அமைத்துள்ளோம்.

50 பொருட்களுக்கு 28 சதவீதம்

இனிமேல், 50 பொருட்களுக்கு மட்டுமே அதிகபட்சமாக 28%ஜி.எஸ்.டி. வரி நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், ஆடம்பர பொருட்களானவாஷிங்மெஷின், ஏ.சி.பெயிண்ட், சிமெண்ட், , குளிர்சாதனப் பெட்டி ஆகியவை தொடர்ந்து 28 சதவீதத்தில் உள்ளன.

18 சதவீதம்

28 சதவீத வரி விதிப்பில் இருந்த 178 பொருட்களின் வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 18 சதவீதத்தில் இருந்த 13 பொருட்கள், 12 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 18 சதவீத வரிவிதிப்பில் இருந்த 6 பொருட்கள், 5 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 12 சதவீதத்துக்குள் இருந்த 8 பொருட்கள் 5 சதவீதத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5 சதவீத வரிவிதிப்பில் இருந்த 6 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல்களுக்கு 5 சதவீதம்

இதில் ஓட்டல், ஏ.சி. ஓட்டல்களுக்கு 12 சதவீதம், 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. அது நீக்கப்பட்டு, இனி 5 நட்சத்திர ஓட்டல் தவிர்த்து, அனைத்து வகையான ஒட்டல்களுக்கும் ஒரே மாதிரியாக 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

178 பொருட்கள்

கைகளால் தயாரிக்கப்படும் நாற்காலி, மேஜை உள்ளிட்ட மரச் சாமான்கள், மின்சாரஸ்விட்ச், பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பிளாஸ்டிக்பொருள்கள், கழிவறைக் கோப்பைகள், கார், பைக் சீட், அதற்கான கவர்கள்,டியோரன்ட், ஷூபாலிஷ், சலவைப்பவுடர், சலவை சோப், மார்பில், தீ அணைக்கும் கருவி, கைக்கடிகாரம், பிளேடு, மெத்தைகள், சேவிங் கிரீம்,ஆப்டர் ஷேவ், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட 178 பொருட்கள் 18 சதவீத வரி விதிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. 

கழிவறையில் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்கள், ஷாம்புஉள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள், எடை பார்க்கும் இயந்திரம்,கம்ப்ரஸர் உள்ளிட்ட 227 பொருள்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இனி இவற்றில் பல பொருட்களுக்குஜிஎஸ்டி 18 சதவீதத்துக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!