
சரக்கு(மது)அடித்தால் பேசாமல் இருக்கவே மாட்டார்கள் சிலபேர். ஏதாவது ஏடாகூடமாக செய்து தர்ம அடி வாங்கிக் கட்டிக் கொள்வதும், சில நேரங்களில் போலீசிடம் சிக்கி கம்பி எண்ணுவதும் வாடிக்கை. அதுபோலத்தான் கொல்கத்தா விமான நிலையத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தகர் பிரபாகர் தோரா. இவர் கொல்கத்தாவுக்கு வியாபார நிமித்தமாக சென்றுள்ளார். அங்கு தனது பணிகளை முடித்துவிட்டுகொல்கத்தாவில் இருந்து ‘இன்டிகோ ஏர்லென்ஸ்’ விமானம் மூலம் சென்னைக்கு வர டிக்கெட் எடுத்திருந்தார். அதுபோல் கொல்கத்தா விமானநிலையத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்தார்.
ஆனால், பிரபாகர் தோரா அளவுக்கு மீறி மது அருந்தியிருந்ததால், அவரால் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலையில் இருந்தார். இதனால், இவர் பயணம் செய்ய வேண்டிய விமானத்தில் நிர்வாகம் அவரை அனுப்ப மறுத்து அடுத்த விமானத்தில் அனுப்ப முடிவு செய்தது.
இதையடுத்து, அடுத்த விமானம் வந்ததும் அப்போதும் பிரபாகர் தோராவுக்கு போதை தெளியவில்லை. இரவு 11 மணிக்கு சென்னைக்கு கடைசி விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது பயணிகள் பாதுகாப்பு வரிசைக்கு பிரபாகர் தோராவை அழைத்துச் சென்று நிற்க வைத்தனர். அப்போதும் மனிதர் போதையின் உச்சத்தில் இருந்து இறங்கவில்லை.
அப்போது, திடீரென அவருக்கு சிறுநீர் கழிக்கும் எண்ணம் வந்துள்ளது. உடனே அருகில் நின்றிருந்த ஒரு பெண் பயணியின் ‘ஹேண்ட் பேக், பேக்’ உள்ளிட்டவைகள் மீது அனைவருக்கும் பார்த்த போதிலும், கொஞ்சம் கூட கூச்சப்படாமல் சிறுநீர் கழித்துவிட்டு நின்றுள்ளார்.
பிரபாகர் தாரேயின் செயலைப் பார்த்து அலறியடித்த அந்த பெண் பயணி, பெரும் கூச்சலிட்டு, விமானநிலைய மேலாளரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவத்தை பார்த்த மற்ற பயணிகளும் பிரபாகர் தாராவை ‘நன்றாக’ கவனித்து, விமானநிலைய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பின், வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது பிரபாகர் சிறையில் கம்பி எண்ணுகிறார்.