விமானத்தில் மதுபோதையில் இருந்த ஒருவர் உடன் பயணித்த மூதாட்டி மீது சிறுநீர் கழித்துவிட்டு, எந்தவித தண்டனையும் இல்லாமல் தப்பியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவில் நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்திருக்கிறார் எழுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர். அவர் பயணித்த விமானத்தில் ஒருவர் கடுமையான மதுபோதையில் இருந்திருக்கிறார்.
நியூயார்க் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டு, சிறிது நேரம் கழித்து விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன. அந்த சமயத்தில் போதை ஆசாமி நேராக மூதாட்டி அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர வந்து, ஆடையை அகற்றி சிறுநீர் கழித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூக்குரலிட்டதைக் கேட்டு வந்த விமானப் பணிப்பெண்கள் போதை ஆசாமியால் அசுத்தப்படுத்தப்பட்ட மூதாட்டியின் உடைமைகள் மீது தூர்நாற்றத்தைப் போக்க ஸ்ப்ரே செய்துள்ளனர். பின் மூதாட்டி தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டதும் மாற்று உடையை வழங்கியுள்ளனர்.
மூதாட்டி அமர்ந்திருந்த இடம் அசுத்தமாக இருந்ததால் சிறிதுநேரம் பணியாளர்களின் இருக்கையில் அமரவைக்கப்பட்டுள்ளார். பின்னர் மீண்டும் அவர் அமர்ந்திருந்த இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். ஆனால், இன்னும் சரியாக சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசிய இருக்கையில் அமர மறுத்துவிட்டார்.
டெல்லியை அடைந்ததும் மூதாட்டியை சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்று சீக்கிரம் வீட்டுக்குச் செல்ல உதவுவதாக விமானப் பணிப்பெண்கள் கூறியுள்ளனர். ஆனால், அவரை விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் அமர்த்திவிட்டுச் சென்றுவிட்டனர். அரைமணிநேரம் காத்திருந்த மூதாட்டி பின்னர் தானே நடைமுறைகளை முடித்துவிட்டு தன் பொருட்களை எடுத்துக்கொண்டு வீடுக்குச் சென்றிருக்கிறார்.
இதனிடையே மூதாட்டி மீது சிறுநீர் கழித்த ஆசாமி எந்த தண்டனையும் இல்லாமல் தப்பிச் சென்றிருக்கிறார்! பின்னர் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். ஏர் இந்தியா நிறுவனம் அந்த போதை ஆசாமி குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாவும் தொடர்ந்து நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.