சென்னையில் இந்த இடத்தில் தொடர்ந்து உயிர் பலிக்கு யார் காரணம்? பாஜக அலிஷாவுக்கு திமுக ராஜீவ் பதில்!!

By SG BalanFirst Published Jan 4, 2023, 12:11 PM IST
Highlights

இளம்பெண் சோபனா உயிரிழப்புக்கு தமிழக அரசைக் குறைகூறிய அலிஷா அப்துல்லாவுக்கு திமுக மாணவர் அணியின் தலைவர் ராஜீவ் காந்தி பதில் அளித்துள்ளார்.

தாம்பரம் – மதுரைவாயல் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண், குண்டும் குழியுமாக இருந்த சாலையில் தடுமாறி விழுந்து உயிரிழந்தார். தன் தம்பியை பள்ளிக்குக் கூட்டிச்சென்றுகொண்டிருந்த அவர் இந்த விபரீத விபத்தில் பலியாகியுள்ளார்.

மோசமான சாலையால் இளம்பெண் இறக்க நேர்ந்தது அப்பகுதி மக்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதனிடையே ஜோஹோ நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த அந்தப் பெண்ணுக்கு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஶ்ரீதர் வேம்பு இரங்கில் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இந்த நெடுஞ்சாலையில் 423 விபத்துகள் நடந்துள்ளதாக புள்ளவிவரம் உள்ளது. எனவே இது மிகவும் ஆபத்தான சாலையாகக் கருதப்படுகிறது. இச்சூழலில், பாஜகவைச் சேர்ந்த அலிஷா அப்துல்லா இந்த விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பேன்சி கார்களுக்கும், விலை உயர்ந்த வாட்ச்களுக்கும், பல சினிமாக்களுக்கும் தாராளமாக கோடிகளை செலவு செய்கிறீர்களே... ஏன் நல்ல சாலை அமைக்க முடியவில்லை? அரசியல் நாடகங்களை எல்லாம் தூர விலக்கிவிட்டு, சாலையில் உள்ள பள்ளங்களைச் சரிசெய்யுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Buying fancy cars, expensive watches, cores of rupees spent on movies..u cant give us good roads?? Leave all political drama aside. And fix these pot holes ! WE PAY TAX ! We demand and urge for at least good roads!! pic.twitter.com/7z9qqo7yFz

— Alisha abdullah (@alishaabdullah)

மேலும், “நாங்கள் வரி செலுத்துகிறோம். விரைவாக தரமான சாலை அமைக்க வலியுறுத்துகிறோம்” என்றும் தமிழக முதல்வரையும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அலிஷாவின் குற்றச்சாட்டு பதில் கூறியுள்ள திமுக மாணவர் அணியின் தலைவர் ராஜீவ் காந்தி, “விபத்து நடந்தது NHAI கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்… இந்தச் சாலையைச் செப்பனிடும் பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது. அதற்கு இன்னமும் டெல்லி அனுமதி கொடுக்காமல் வைத்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘அரை’ டாக்டரம்மா,விபத்து நடந்தது NHAI கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்…இந்த சாலையை செப்பனிடும் பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது.அதற்கு இன்னமும் டெல்லி அனுமதி கொடுக்காமல் வைத்திருக்கிறது.பத்திரிக்கை செய்தியின் கடைசி இரண்டு பாராவை படியுங்கள். 🤦🏽‍♂️🤦🏽‍♂️ https://t.co/h0pknQBlQA pic.twitter.com/rUxTs6ZwCJ

— R.Rajiv Gandhi (@rajiv_dmk)

அலிஷாவை ‘அரை’ டாக்டரம்மா என்று கிண்டல் செய்திருக்கும் ராஜீவ், ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான செய்தியின் படத்தை இணைத்து, “பத்திரிகைச் செய்தியின் கடைசி இரண்டு பாராவை படியுங்கள்” என்றும் கூறியுள்ளார்.

அதாவது, விபத்து நடைபெற்ற 32 கி.மீ. தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலைமத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சாலை சீரமைப்பு அமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 11 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே பணிகள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் பணிகள் நிறைவடையாமல் உள்ளன.

மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெஞ்சாலையைச் சீரமைக்க ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழக அரசைக் குற்றம்சாட்டுவதா என்ற கேள்வியை ராஜீவ் காந்தி எழுப்பியிருக்கிறார்.

click me!