
குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறீர்களா ? 10 ஆயிரம் ரூபாய் ரெடியா எடுத்து வச்சுக்கங்கோ
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான சட்ட விதிமுறைகளில் பல மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. சில விதி முறைகள் கடுமையாக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்குவது தொடர்பான பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகின்றன. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மசோதா தொடர்பாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நாடாளு மன்ற நிலைக்குழு தெரிவித்த சில யோசனைகளும் மசோதாவில் சேர்க்கப்பட்டன. இந்த சட்ட திருத்த மசோதா, மோட்டார் வாகன விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதம் விதிக்க வகை செய்கிறது.
அதன்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், , ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
அவசர ஊர்திகளுக்கு வழி விடாமல் சென்றால் 10 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய அம்சமும் இந்த சட்ட திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
காப்பீட்டு நிறுவனங்கள் வாகன விபத்துக்கு அதிக பட்சமாக 10 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தால்.5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.
சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அதிகாரம் கொண்ட கமிட்டிகள் எம்.பி.க்கள் தலைமையில் அமைக்கப்படும் என்றும், இந்த கமிட்டிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் இடம் பெறுவார்கள் என்றும், இந்த கமிட்டிகள் நெடுஞ்சாலை முதல் நகரசபை அளவில் உள்ள சாலைகளில் விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அதை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த சட்ட திருத்த மசோதாவின்படி, வாகன சோதனை ஓட்டம் நடத்தாமல் இனி யாரும் ஓட்டுனர் உரிமம் பெற முடியாது என்றும், சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெடுஞ்சாலைகளில் சிகிச்சை மையங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாகனம் ஓட்டுபவர் மது அருந்தி இருந்தால் அந்த வாசனையை வைத்தே வாகனம் தானாக நின்றுவிடும் வகையிலான தொழில் நுட்பம் வந்து இருப்பதாகவும் அதை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.