
நாடாளுமன்ற எம்.பி.க்களின் சம்பளத்தை விரைவில் இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 545 பேரும், மேல் சபையில் 245 பேருமாக 790 பேர் எம்.பி.க்களாக பதவி வகித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.50 ஆயிரமும், பல்வேறு படிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான ஊதியம் மற்றும் படிகளை நிர்ணயிக்க ‘எம்.பி.க்களின் ஊதியம் மற்றும் படிகளுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழு’ அமைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ. எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையிலான இந்த குழு, எம்.பி.க்களின் தற்போதைய சம்பளத்தை 100 சதவீதம் (இரு மடங்கு) உயர்த்துமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் பல்வேறு படிகளை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் அடிப்படை சம்பளமாக மாதம் ரூ.1 லட்சமும், இதர படிகளும் பெறுவார்கள் என கூறப்படுகிறது. இது கட்சி பேதமின்றி அனைத்து எம்.பி.க்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பி.க்களின் சம்பளத்தை போல ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களின் சம்பளத்தையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், கவர்னர்களின் சம்பளம் ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தப்படும் என தெரிகிறது.