
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி போலீசாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுது. புதுவை கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய கிரண்பேடி, தங்களுடன் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் குற்றம் புரிந்தாலும், உடன் பணிபுரியும் போலீசார்கள் இது குறித்து 1031 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதனால், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாது என்று கூறிய அவர், தீபாவளி பண்டிகையின்போது பரிசு பொருட்கள், இனிப்புகள் ஆகியவற்றை போலீசார் இலவசமாக வாங்கக் கூடாது என்றும் கூறினார்.
கடைகளில் பணம் கொடுத்தே வாங்க வேண்டும் என்றும், உயர் அதிகாரிகளுக்கும் பரிசு பொருட்கள், பூங்கொத்துகள், இனிப்புகள் ஆகியவை வழங்க கூடாது என்றும் கிரண்பேடி பேசினார். புதுவை காவல் துறையில் தவறு செய்யும் போலீசார் பணியிடை நீக்கம் செய்வதற்கு பதிலாக உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
போலீசார் அனைவரும் தங்கள் ஊதியத்திலேயே வாழ கற்றுக் கொள்ள வேண்டும்; காவல் துறை பணியை சேவையாக பார்க்க வேண்டும்; காவல் துறையை பணம் சம்பாதிக்கும் வியாபாரமாக பார்க்கக் கூடாது என்றும் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அப்போது பேசினார்.