நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து அலுவல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்த கோரி மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேசமயம், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதுகுறித்து விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோன்று அமளியில் ஈடுபட்ட 15 மக்களவை எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
undefined
இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து அலுவல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்த கோரி மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், விதி 267-ன் கீழ் மாநிலங்களவை அலுவல்களை ரத்து செய்துவிட்டு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் ஊடுருவியவர்கள் தற்கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அதன் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் லலித் ஜா என்பவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாதுகாப்புக் குறைபாடு உள்ளது உண்மை. ஆனால் அதற்குக் காரணம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான வேலையின்மை என தெரிவித்துள்ளார்.