ஒரே கட்சி உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றம்; பாஜகவின் சர்வாதிகார சிந்தனை - திருச்சி சிவா தாக்கு!

By Manikanda Prabu  |  First Published Dec 20, 2023, 5:05 PM IST

ஒரே கட்சி உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றத்தை நடத்த பார்க்கிறார்கள் என பாஜக மீது திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கடந்த 13ஆம் தேதியன்று அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நுழைவு சீட்டு அளித்தது பாஜக எம்.பி. எனவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அவை நடவடிக்கைகளின் போது நாடாளுமன்ற தாக்குதல் குறித்து விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொத்துக்கொத்தாக கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.

Latest Videos

undefined

இன்று வரை மக்களவையில் இருந்து 97  உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் இருந்து 46 உறுப்பினர்களும் என இதுவரை மொத்தம் 143 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒரே கட்சி உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றத்தை நடத்த பார்க்கிறார்கள் என பாஜக மீது திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் சர்வாதிகார சிந்தனையை போன்றே ஒரே கட்சி உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றத்தை நடத்த பார்க்கிறார்கள்.” என குற்றம் சாட்டினார்.

தென் மாவட்டங்கள் கனமழை: முதல்வர் ஸ்டாலின் பயணம் மீண்டும் தள்ளி வைப்பு!

தமிழகத்தில் கனமழை, வெள்ள பாதிப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண தொகை கோரியது பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திருச்சி சிவா, “எதிர்க்கடசிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் இப்படி வஞ்சிப்பது மற்ற நேரங்களில் இருந்தாலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த வரலாறு காணாத வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு மக்கள் வாடி நிற்கின்ற போது, தேவைகளால் தடுமாறுகிற போது மாநில அரசு முனைப்போடு செயல்படும் போது மத்திய அரசு உதவி செய்யவோ, உறுதுணையாகவோ இருக்க முயலவில்லை என்றால் அங்கேயும் அவர்கள் அரசியல் செய்கிறார்கள், பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.” என குற்றம் சாட்டினார்.

குஜராத்துக்கு ஏதாவதொன்றால் அள்ளிக்கொடுக்கும் மோடி அரசு தமிழகத்தை வஞ்சிப்பது ஏன் எனவும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார். முன்னதாக, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து, விதி 267-ன் கீழ் மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும் மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!