
NEP: Dayanithi Maran vs Dharmendra Pradhan: நாடாளுமன்ற மக்களவையில் இன்று தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது என்று திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டது'' என்றார். இதற்கு தமிழ்நாட்டு எம்.பி.க்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.
தேசிய கல்விக்கொள்கை
இது குறித்து பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான தேசிய கல்விக்கொள்கையை திமுக ஒருபோதும் சம்மதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். ''திமுக அரசு தேசிய கல்விக்கொள்கையில் கையெழுத்திட ஒப்புக்கொண்டதாக தர்மேந்திர பிரதான் பொய் சொன்னார்" என்று தயாநிதி மாறன் கூறினார். ''தேசிய கல்விக்கொள்கை அல்லது 3 மொழிக் கொள்கைக்கு திமுக ஒருபோதும் சம்மதிக்கவில்லை. எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றுதான் நாங்கள் சொன்னோம்'' என்றார்.
பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக்கொள்கை ஏற்கப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்
இந்தி திணிப்பு கூடாது
தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன், ''வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே ஒரு மொழியை மட்டும் கற்கும்போது, தமிழ்நாட்டில் உள்ள நமது மாணவர்கள் ஏன் 3 மொழிகளைக் கற்க வேண்டும்? நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி கற்க விரும்பும் மாணவர்கள் இருந்தால், அவர்கள் அதைச் செய்யலாம், ஆனால் அது கட்டாயமாக இருக்கக்கூடாது" என்று தயாநிதி மாறன் தெரிவித்தார்.
தமிழக மக்களை "நாகரிகமற்றவர்கள்" என்று கூறிய மத்திய அமைச்சர்
முன்னதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசு மற்றும் தமிழக மக்களை "நாகரிகமற்றவர்கள்" என்று குறிப்பிட்டதற்கு திமுக எம்பி கனிமொழி தனது கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
கனிமொழி எம்.பி வருத்தம்
இது தொடர்பாக பேசிய கனிமொழி, "மத்திய அமைச்சர் (தர்மேந்திர பிரதான்) திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசு மற்றும் தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என்று கூறியது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது" என்று கூறினார். இதனைத் தொடர்ந்து தான் கூறிய நாகரிகமற்றவர்கள் என்ற வார்த்தையை திரும்ப பெறுவதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசு: திருச்சி சிவா குற்றச்சாட்டு