
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஒரு நிதியாண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த திட்டத்தை மத்திய பாஜக அரசு 'வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்' என்று மாற்றியுள்ளது. மேலும் 100 நாள் வேலை என்பது 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இந்த தொழிலாளர்களுக்கான 60 சதவிகித சம்பளத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். 40 சதவிகிதம் மாநில அரசு ஏற்றுகொள்ள வேண்டும் என்று புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் பெயரை மாற்றியதற்கும், இந்த திட்டத்தில் மாநில அரசுகளுக்கு நிபந்தனைகள் விதித்தற்கும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றியது போன்று ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்ற முடியுமா? என்று பாஜகவுக்கு கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''காங்கிரஸ் தலைவர்களைத் துன்புறுத்த அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது.
ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்ற முடியுமா?
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை அழிக்க முயற்சித்து வருகிறது. 100 நாள் வேலை திட்டம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் இந்தியாவின் மிகவும் பிரபலமான வேலைவாய்ப்பு திட்டங்களில் ஒன்றாகும். ஆனால் இது காங்கிரஸ் கொண்டு வந்தது என்பதற்காக பாஜக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே அழிக்க நினைக்கிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றுங்கள்'' என்று சவால் விட்டுள்ளார்.