கர்நாடகாவின் துணை முதல்வராவதை டி.கே. சிவகுமார் உறுதி செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் முதல்வர் யார்? துணை முதல்வர் யார்? என்பதை உலகமே உற்று நோக்கி வருகிறது. இதற்குக் காரணம், ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி தொழிற்சாலைகளிலும் இந்த மாநிலம் முன்னிலை வகிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த மாநிலத்தின் பங்கு அதிகமாக இருக்கிறது. ஐடி நிறுவனம் என்றாலே பெங்களூரு என்ற பெயர் இன்றும் இருக்கிறது.
கடந்த ஐந்து நாட்கள் மர்மம் நீடித்தது. இன்று முடிவுக்கு வந்துள்ளது. இதை கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், முக்கிய மூத்த தலைவரும் அடுத்து கர்நாடகா மாநிலத்தின் துணை முதல்வராகப் போகும் டி.கே. சிவகுமார் உடைத்துள்ளார். இவர் இந்தியா டுடேவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்றும், துணை முதல்வர் தான் தான் (டிகே சிவகுமார்) என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் பெரும்பாலானவர்களின் விருப்பப்படி ஏன் இது நடக்கக் கூடாது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
தற்போது காங்கிரஸ் ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வீட்டுக்கு இன்னும் சிறிது நேரத்தில் சித்தராமையா செல்லவிருக்கிறார்.
இன்று மாலை ஏழு மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் குயின்ஸ் ரோட்டில் இருக்கும் இந்திரா காந்தி பவனில் நடக்கிறது. இதை முன்னிட்டு அனைத்து எம்எல்ஏக்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று டி.கே. சிவகுமார் கடிதம் எழுதி இருக்கிறார். இவர் கர்நாடகா மாநிலத்தின் தலைவராக இருப்பதால் இவர் இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் புதிய எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், எம்பிக்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ தப்பா முடிவு பண்ணாதீங்க” கர்நாடக வெற்றி குறித்து காங்கிரஸை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்..
சித்தராமையா கிராமத்தில் கொண்டாட்டம்:
தற்போது வெளியாகி இருக்கும் செய்தியை அடுத்து, சித்தராமையாவின் சொந்த கிராமத்தில் அவரது இல்லத்திற்கு வெளியே கொண்டாட்டங்கள் வெடித்துள்ளது. சித்தராமையா அடுத்த முதல்வராக பதவியேற்பார் என இன்று காலை செய்தி வெளியானதும், மைசூரு மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திலும், அவரது இல்லம் அருகிலும் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளது.
பதவியேற்பு விழா வரும் சனிக்கிழமை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.