கர்நாடகா மாநிலத்தின் முதல்வராகிறார் சித்தராமையா துணை முதல்வராகிறார் டிகே சிவகுமார். இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே பத்தாம் தேதி தேர்தல் நடந்து முடிந்து 13ஆம் தேதி முடிவுகள் வெளியானது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்கட்சியாக உருவானது. ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாகவும் கடந்த ஐந்து நாட்களாக தலைவர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் கூட்டம் நடந்தது. இதில், கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்பட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் மல்லிகார்ஜுன கார்கேவுடன் சந்திப்பை மேற்கொண்ட சித்தராமையா, டிகே சிவகுமார் இருவரும் நேற்று ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக தான் முதல்வராக வேண்டும் என்று கட்சி தலைமையை டி.கே. சிவகுமார் கட்டாயப்படுத்தி வந்தார். கர்நாடகா மாநிலத்தின் வெற்றிக்கு டி.கே. சிவகுமாரின் உழைப்பு அளவிட முடியாதது என்று தலைமை கருதி இருந்தாலும், அவர் மீதான ஊழல் வழக்குகளால் மீண்டும் சிக்கல் எழலாம் என்று கட்சி தலைமை கருதியது. இந்த நிலையில்தான் கட்சி சித்தராமையாவை தேர்வு செய்தததாக கூறப்படுகிறது.
“ தப்பா முடிவு பண்ணாதீங்க” கர்நாடக வெற்றி குறித்து காங்கிரஸை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்..
மல்லிகார்ஜுன கார்கே:
தன்னிடம்தான் எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று தலைமையை சித்தராமையா அச்சுறுத்தி வந்தாலும், ''முதுகில் குத்த மாட்டேன்'' என்று சிவகுமார் கூறி வந்தார். இந்த நிலையில்தான் நேற்று இறுதியாக முதல்வர் தேர்வு நடந்து முடிந்தது. டெல்லியில் சோனியா காந்தி இல்லாததால், அவருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் சித்தராமையா மற்று டிகே சிவகுமாரிடம் ரந்தீப் சிங், கே.சி.வேணுகோபால் இருவரும் நேற்றிரவு அமைச்சரவை குறித்து எடுத்துரைத்தாகத் தெரிகிறது. இவர்கள் இருவரும் இணைந்து இன்று பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் 2-3 நாட்களில் புதிய அமைச்சரவை: காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உறுதி
எங்கே சிக்கல்?
முன்பு இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், இரண்டாவது முறை டிகே சிவகுமாரும் முதல்வராவது என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால், முதல் இரண்டரை ஆண்டுகளை சிவகுமார் கேட்டதால் மீண்டும் சிக்கல் எழுந்தது. முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு இவர் முதல்வராகும் பட்சத்தில் இவர் மீதான வழக்குகள் உயிர் பெறும் என்றும், இதனால் பிரச்சனைகள் எழும் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதியில் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் நடக்கவிருப்பதால், தலைமை இதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானது.
முதலில் சித்தராமையா:
ஆனால், அதுமாதிரியான அறிவிப்பும் வெளியாகிறதாம். அதாவது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக நீடிப்பார். அதன்பின்னர், டிகே சிவகுமார் முதல்வராகிறார். இரண்டாவது சுற்றில் முதல்வராக டிகே சிவகுமார் இருக்கும்பட்சத்தில், சித்தராமையா அவருக்கு கீழ் முதல்வராக இருக்க முடியாது. இதற்குக் காரணம் சீனியாரிட்டி. இவருக்கு பதிலாக அவரது மகன் அல்லது பேரன் அரசியல் வாரிசாக அவதாரம் எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சித்த்ராமையாவின் மகனுக்கு அல்லது பேரனுக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
டி.கே. சிவகுமாருக்கு முக்கியத்துவம் ஏன்?
கட்சி தலைமைக்கு டி.கே. சிவகுமார் முக்கிய நபராக இருந்தாலும், அவர் மீதான வழக்குகள்தான் இடஞ்சலாக இருக்கிறது. கட்சிக்கு நிதி திரட்டுவதில் முக்கிய நபராக இருக்கிறார். வரும் மாநில தேர்தல்களை எதிர்கொள்வதற்கு கட்சிக்கு சிவகுமார் முக்கிய நபராகவும் பார்க்கப்படுகிறார். ஆனாலும், சமூக ரீதியான செல்வாக்கு சித்தராமையாவுக்கு இருப்பதால் அவருக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நிலையில் கட்சி தலைமை இருக்கிறது. இவர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், முன்பு முதல்வராக இருந்தபோது. குருபா சமூகத்துக்கு அதிக உதவிகளை செய்துள்ளார். அவர்கள் இவருக்கு பின்னர் இருப்பதும் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் உறுதி செய்து இருந்தது. அந்த சமூகத்தின் அதிக வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்து இருந்தது.
இதுவரை வெளியான செய்தியில், முதல்வர், துணை முதல்வர் என்பதே முக்கியச் செய்தியாக வெளியாகி வருகிறது. அறிவிப்பில் எந்த மாற்றமும் இருக்கலாம்.