
விலங்குகளில் மிகவும் புத்திக்கூர்மை, மனிதனை போல் குடும்ப உறவு முறை, செண்டிமெண்டுக்கு இடம் கொடுத்தல்...ஆகிய குணங்களில் குரங்களுக்கு இணையானவை யானைகள் என்பார்கள் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள்.
அதை நிரூபிக்கும் விதத்தில் ஒரு சம்பவம் கேரளத்தில் நடந்திருக்கிறது. அங்கே கால்வாய் போன்ற ஒரு பள்ளத்தில் குட்டி யானை ஒன்று விழுந்துவிட, அதை மீட்பதறியாது யானைக்கூட்டம் ஆற்றுக்கு அந்தப்பக்கம் நின்று அலறியது. இந்த நிலையில் ஜே.சி.பி.யின் உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் குட்டியை ஆற்றுக்குள் தள்ளி அனுப்பிவிட முயன்றனர். இந்த முயற்சியை பொறுமையாய் கவனித்துக் கொண்டிருந்த யானைகள், குட்டி மீளும் நிலை வந்ததும் ஆற்றினுள் இறங்கி ஓடோடி வந்து அந்த பிஞ்சை அரவணைத்துக் கூட்டி சென்றன.
அப்போது அந்த கூட்டத்திலிருந்த பெரிய சைஸ் யானை ஒன்று கூட்டத்தை பார்த்து தன் தும்பிக்கையை உயர்த்தி லேசாய் பிளிறி நன்றி சொல்வது போல் செய்தது. இதை கண்டு ஆச்சரியத்தின் உச்சத்துக்கு போன கூட்டம் ஆரவாரம் செய்ய மறுபடியும் அது அப்படியே செய்துவிட்டு நகர்ந்தது.
இந்த காட்சி வாட்ஸ் ஆப்பில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஆனால் அதேவேளையில் வேறு சில ஆராய்ச்சியாளர்களோ ‘யானை நன்றியெல்லாம் சொல்லவில்லை. அது மக்களின் ஆரவாரத்தை பார்த்து மிரண்டு ரியாக்ட் செய்கிறது.” என்கிறார்கள்.
ஆனால் சில வருடங்களுக்கு முன் ஆனைகட்டி செல்லும் வழியில் தடாகம் எனுமிடத்தில் செங்கல் சூளை தொட்டிக்குள் விழுந்த யானைக்குட்டியை மக்கள் மீட்டுக் கொடுத்தபோது, ஓடி வந்து அதை கட்டிக் கொண்ட பெரிய யானை தலை குனிந்து, துதிக்கை தூக்கி மக்களை நோக்கி பிளிறி சென்றதை ‘நன்றி’ என்றே இன்னமும் நம்புகிறார்கள் அந்த கிராம மக்கள்.
யானை சொன்னது நன்றியோ இல்லையோ! குட்டியை காப்பாத்துன உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு.