
ஹாதியா படிப்பை தொடர வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன், அதே நேரத்தில், தீவிரவாதி ஒருவரை என் வீட்டில் வைத்திருக்க முடியாது’‘ என்று ஹாதியாவின் தந்தை அசோகன் கொதிப்புடன் தெரிவித்தார்.
சேலத்தில் படிப்பு
கேரள பெண் ஹாதியாவின் லவ் ஜிகாத் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தமிழ்நாட்டில் உள்ள சேலம் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று அவர் தனது படிப்பை தொடரலாம் என தீர்ப்பளித்தது.
ஹாதியாவை மீண்டும் கல்லூரியில் சேர்த்து கொண்டு அவர் தங்குவதற்கு விடுதி வசதிகளை வழங்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஹாதியா, சேலத்தில் தனது ஹோமியோபதி படிப்பை தொடர இருக்கிறார்.
தந்தை வரவேற்பு
இந்த வழக்கின் முடிவில், சேலம் ஹோமியோபதி கல்லூரி டீனை ஹாதியாவின் பாதுகாப்பாளராக நியமித்தது உச்ச நீதிமன்றம். மேலும் எதுவும் சிக்கல் தொடர்ந்தால் தங்களை அணுகலாம் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் டெல்லியில் பேட்டி அளித்த ஹாதியாவின் தந்தை கே.எம். அசோகன் தனது மகள் படிப்பை தொடர வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார். பேட்டியின் போது நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து அவர் மேலும் கூறியதாவது-
தீவிரவாதியை வைத்திருக்க முடியாது
‘‘எனது மகளை சட்ட விரோதமாக வீட்டில் நான் அடைத்து வைக்கவில்லை. ஒரு மதம் மற்றும் ஒரு கடவுள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், எனது குடும்பத்தில் தீவிரவாதி ஒருவரை வைத்திருக்க முடியாது.
சிரியா நாடு (தீவிரவாத ஆதிக்கம்) பற்றி ஹாதியாவுக்கு முன்பு எதுவும் தெரியாது. ஆனால் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்பு அங்கு செல்ல அவர் விரும்புகிறார்.
பாதுகாப்பு
உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதால் எனது மகளின் பாதுகாப்பு குறித்து எனக்கு சந்தேகமும் இல்லை. நீதிமன்றம் அனுமதி அளித்தால் சேலத்துக்கு சென்று எனது மகளை சந்திப்பேன்’‘.
இவ்வாறு அவர் கூறினார்.