ஜாம்நகர் விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக மாற்றியது எப்படி என்ற கேள்விக்கு பதிலளிக்க டிஜிசிஏ மறுப்பு தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் குழும தலைவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதிக்கு ஈஷா என்ற மகளும், ஆகாஷ், ஆனந்த் என்ற இரு மகன்களும் உள்ளன. இதில், ஈஷா, ஆகாஷ் ஆகியோருக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில், கடைசி மகனான ஆனந்த் அம்பானிக்கும் விரன் மெர்ச்சன்ட் என்ற தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள அண்டிலா இல்லத்தில் அதிகாரப்பூர்வமாக கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் தொழிற்சாலையுடன் கூடிய விலங்குகள் பூங்காவில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றது. அதில், உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, மைக்ரோசாப்ட நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், டிஸ்னி நிறுவன சிஇஓ பாப் இகர், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அம்பானி இல்லத் திருமண விழாவுக்கு வெளிநாட்டு பிரமுகர்கள், உள்நாட்டு பிரபலங்கள் வர ஏதுவாக குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து அளிக்கப்பட்டது. பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் அந்த விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது.
இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியும். அதேபோல் ஜாம்நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டுச் செல்ல முடியும். வழக்கமாக, ஜாம் நகரில் தினசரி 6 விமானங்கள்தான் வந்து செல்லும். ஆனால், அம்பானி இல்லத் திருமணத்தின்போது, 100க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து சென்றன.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுத்தது. ஆனால், அம்பானி வீட்டு திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மருத்துவ சுற்றுலாவின் முக்கிய இடங்களில் ஒன்று இந்தியா: மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர்!
இதனிடையே, ஜாம்நகர் விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக மாற்றியது எப்படி? முகேஷ் அம்பானியின் குடும்ப நிகழ்ச்சிக்காக ஜாம்நகர் விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்கப்பட்டதில் பின்பற்றப்பட்ட விதிகள் என்ன? என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தங்களிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்து பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆனந்த் அம்பானியின் 2ஆவது திருமணத்துக்கு முந்தைய (Pre-Wedding) நிகழ்ச்சிக்கு சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இத்தாலியில் இருந்து பிரான்ஸ் வரை மே மாதம் 29ஆம் தேதி (நேற்று) முதல் ஜூன் 1ஆம் தேதி வரை செல்லும் சொகுசு கப்பலில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி, பார்ட்டி நடைபெறவுள்ளது. இதிலும், பாலிவுட் பிரபலங்கள், சர்வதேச பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.