திருமலை திருப்பதி கோவிலில் லட்டு சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் பூரான் இருந்ததாக பக்தர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமலை திருப்பதி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்கின்றனர். மேலும் தற்போது புரட்டாசி மாதம் நடைபெறுவதால் திருப்பதி கோவிலில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்கின்றனர். இதனிடையே கோவிலில் விநியோகிக்கப்பட்ட அன்னதான பிரசாதத்தில் பூரான் கிடந்ததாக பக்தர் ஒருவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பக்தர் ஒருவர் கூறுகையில், தனக்கு பரிமாறப்பட்ட தயிர் சாதத்தில் பூரான் ஒன்று முழு வடிவத்துடன் இறந்த நிலையில் கிடந்ததாக குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. உடனடியாக குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
NPS Vatsalya: 'மாதம் 5,000 முதலீடு - 3.5 கோடி ரிட்டன்' குழந்தைகளுக்கான மிகச்சிறந்த சேமிப்பு திட்டம்
விசாரணையைத் தொடர்ந்து விளக்கம் அளித்த தேவஸ்தான அதிகாரிகள் பக்தரின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர். பக்தரின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஏழுமலையானை தரிசிக்க வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் அதிக அளவில் சுட சுட அன்னப்பிரசாதம் தயார் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட சூட்டிலும் பூரான் முழு உருவத்துடன் இருந்ததாக பக்தர் குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது.
வெள்ளை சாதத்துடன் தயிர் சேர்ப்பதாக எடுத்துக் கொண்டாலும் சூடான சாதத்தில் தயிர் கலந்து நன்கு கிளறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் பூரான் அப்படியே இருப்பதாகக் கூறுவது முற்றிலும் திட்டமிடப்பட்ட செயல் என்று தான் கருதத் தோன்றுகிறது. இதுபோன்ற பொய்யான செய்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
குழந்தைகளின் தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்: பெற்றோருக்கு இன்போசிஸ் மூர்த்தி சொல்லும் 8 டிப்ஸ்
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு சர்ச்சையே முடிவுக்கு வராத நிலையில், தற்போது அன்ன பிரசாதத்தில் பூரான் கிடந்ததாக பரவும் செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.