
திருப்பதி கோயில் தரிசனம்
திருப்பதி கோயிலுக்கு சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என கூறுவார்கள். அந்த அளவிற்கு சக்தி பெற்ற கடவுளாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடிக்கணக்கான ரூபாய் திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 20.05 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்னர். உண்டியல் காணிக்கையாக 106 கோடியே 17 லட்சம் ரூபாய் கிடைக்க பெற்றுள்ளது.
விமானம் பறப்பதால் இடையூறு
இந்த நிலையில் மலையின் மீது அமர்ந்துள்ள கோயில் அருகில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் எழுதியுள்ள கடிதத்தில், திருப்பதி திருமலை கோவில் பகுதிகளில் விமானங்கள் பறக்கத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடுவுக்கு அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் கோயிலின் புனிதத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, திருமலையில் விமானங்கள் பறக்கத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
விமானம் பறக்க தடை
மேலும் திருப்பதி திருமலை மலைகளில் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற வான்வழி பயணங்களால் திருப்பதி ஏழுமலையான் கோவில் சுற்றியுள்ள புனிதமான சூழலுக்கு தொந்தரவு ஏற்படுவதாக கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் திருப்பதி திருமலை மீது விமானங்கள் பறக்கத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக உடனடியாக பதிலளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரை அறங்காவலர் குழு தலைவர் கடிதத்தில் கேட்டுக் கொண்டார்.