
ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி இன்று தளர்த்தியுள்ளது. அதன்படி, நாள்தோறும் ஒரு ஏ.டி.எம். கார்டுமூலம், ரூ. 4500 வரை எடுக்கலாம் என்ற அளவில் இருந்து அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.
நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ. 500, ரூ.1000 செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதிஅறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
நாள்தோறும் ஏ.டி.எம்.களில் இருந்து ரூ. 2 ஆயிரம் வரையிலும், வங்கிகளில் இருந்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரையிலும் எடுக்கலாம் என மக்களுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
இந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி கடந்த டிசம்பர் 30-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், ஏ.டி.எம்.களில் இருந்து ஒரு ஏ.டி.எம். கார்டு ஒன்றுக்கு ரூ.4500 வரை எடுக்கலாம் என உயர்த்தியது. ஆனால், வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும் அளவை உயர்த்தவில்லை.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஏ.டி.எம். மையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு எடுக்கும் ரூ.4500 என்ற அளவை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, ஒரு ஏ.டி.எம். கார்டு வைத்து இருப்பவர், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ள முடியும்.
அதேபோல, வங்கிகளில் நடப்பு கணக்கு(c/ac) வைத்து இருப்பவர்கள் வாரத்துக்கு ரூ. 50 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்ற அளவை ரூ. ஒரு லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மற்ற கட்டுப்பாடுகளில் அதே நிலை தொடர்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.